இராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா
கொண்டாடும்போது பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:விநாயகர் சதுர்த்தி பண்டிகை எதிர்வரும் 22.08.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கு.வி.மு.ச. பிரிவு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.சிறிய கோயில்களில் (ஆண்டிற்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ள கோவில்கள்) பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய கோயில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், கோயில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, ராமநாதபரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்லயோலா இக்னேஷியஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.