தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க எம்பி கோரிக்கை

இது குறித்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கூறியதாவது:கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் பரவிக்கொண்டிருக்கிறது.தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி தேவையான சிகிச்சை அளித்து குணப்படுத்தினால் மட்டுமே மற்றவர்களுக்கு நோய் பரவாமல் முழுமையாக தடுக்க இயலும்.ஆனால் தற்போது பல்வேறு மாவட்டங்களில் நோய்தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே மூன்று லட்சத்திற்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது, முழுமையான சிகிச்சை பெறுவதற்கு 5 முதல் 6 லட்சம் வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது என பாதிக்கப்பட்டோர் தெரிவித்து வருகின்றனர்.அரசு மருத்துவமனையிலும் போதுமான படுக்கை வசதி இல்லாமல், கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் மருத்துவமனைக்கும் செல்ல முடியாமல், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க தயங்கும் நிலை உருவாகுமோ என்ற அச்சம் எழுகிறது.

அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் மிகப்பெரிய சவாலை நாம் சந்திக்க நேரிடும்.எனவே அரசு இதில் கூடுதல் கவனம் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!