இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கிராம பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலர் சதீஷூக்கு தகவல் கிடைத்தது. இதன்படி வனச்சரக அலுவலர் சதீஷ், வனவர் ராஜேஷ், வனக்காப்பாளர் ஜோசப், வனக்காவலர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்,
தீர்த்தாண்டதானம் பகுதியில் இன்று காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தீர்த்தாண்டதானம் வீரையா (60) வீட்டில் வெள்ளை அரிவாள் மூக்கன் 3, வல்லூறு 6, கதுவாலி 5 ஆகிய பறவைகள் கூண்டில் அடைக்க பதுக்கியது தெரிந்தது. வீரையா வீட்டில் இருந்து வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பி கூண்டு கைப்பற்றப்பட்டது . பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள், வலைகள் ராமநாதபுரம் வன அலுவலகம் கொண்டு வரப்பட்டது. வன உயிரின காப்பாளர் மாரிமுத்து அறிவுறுத்தல் படி வீரையாவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கைப்பற்றிய பறவைகளை சரணாலயத்தில் வனத்துறையினர் மீண்டும் பறக்க விட்டனர்.


You must be logged in to post a comment.