இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் வேளாண் துறை மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்போடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு சாகுபடி செய்யப்பட்ட வறட்சியை தாங்கி வளரக்கூடிய TDCM 1 Dubraj ரக நெற்பயிர் அறுவடையை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் இன்று துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர்
வீரராகவ ராவ் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி, விவசாயதாரர்களின் மகசூலை அதிகரிக்கவும், அவர்களின் வருவாயை உயர்த்தவும் வேளாண் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மழை பொய்த்து போகும் காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகள் பயன்பெற்றிடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூலம் பருவநிலை மாற்றத்திற்கேற்ப வறட்சியை தாங்கி குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் வகையில் கண்டறியப்பட்ட -TDCM 1 Dubrajஎன்ற நெல் ரகம் மாநிலத்திலே முதன்முறையாக வலையனேந்தல் கிராமத்தில் பரிசாத்திய முறையில் அறிமுகம் செய்யப்பட்டு, நெல் விதையின் திறன் அறியும் திடல் அமைக்கும் பொருட்டு துரைராஜ் என்ற விவசாயிக்கு 5 கிலோ நெல் விதை வழங்கப்பட்டு செப். 26 அன்று பயிரிடப்பட்டது.இவ்வாறு பயிரிடப்பட்ட நெல் விதைகள் சிறப்பான முறையில் நெற்கதிர்களாக வளர்ச்சியடைந்ததை அடுத்து நேற்று (ஜன.1) அறுவடை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 350 கிலோ அளவில் நெல் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.இந்நிகழ்வின்போது, பாபா அணு ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, வேளாண் துணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக் அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.