வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக தீவு பகுதியான ராமேசுவரத்தில் 69 ஆண்டுகளுக்கு பிறகு மேகவெடிப்பு காரணமாக 44 செ.மீ. கொட்டித் தீர்த்தது.நேற்று இரண்டாவது நாளாகவும் மாவட்டம் முழுவதும் 329 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.வரலாறு காணாத இந்த மழைப்பொழிவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே உள்ள வண்ணாங்குண்டு, பத்ராதரவை உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் முயற்சிக்கு அடுத்தடுத்த நாட்களும் பெய்த மழை தடை போட்டது. இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். தொடர்ந்து இனியும் மழை பெய்தால் தாங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.இதேபோல் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 2 நாட்களாக பெய்த கனமழையால் அங்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.நேற்று முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரில் நடந்து செல்ல முடியாமல் சிகிச்சைக்கு வந்த பலர் திரும்பிச் சென்றனர். அத்துடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகப் பகுதியில் உள்ள அம்மா உணவகம் பகுதிக்கு செல்ல கூட முடியாத அளவுக்கு மழை நீர் அம்மா உணவகம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அலுவலர்கள் தங்கும் கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது. மேலும் ராமநாதபுரம் நகரில் கடந்த இரு தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதற்கிடையே ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பெய்த பலத்த மழையால் அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். குறிப்பாக கோவில் ரதவீதிகள், ராமர் தீர்த்தம் செல்லும் பகுதியில் உள்ள குடியிருப்புகள் ஆகிய இடங்களிலும் தற்போது வரை தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.அத்துடன் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களின் நலன் கருதி ராமேசுவரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.