குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்ததாக கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்துள்ள தகவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் குவைத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் இறந்து போன கட்டிடத்தில் இவரும் தங்கி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் தீ விபத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாகவும் அங்கிருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவல்களால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மனைவி குருவம்மாள் மகன் சரவணக்குமார் ஆகியோர் கதறி அழுது சோகம் அடைந்துள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக விசாரணை நடத்தி அவரது உடலை கொண்டு வரவும் உரிய இழப்பீடு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

You must be logged in to post a comment.