இராமநாதபுரத்தில் போதை மாத்திரை பறிமுதல்: வாலிபர் கைது..
இராமநாதபுரத்தில் போதை மாத்திரை எனக் கூறி விற்பதற் காக வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். குடியரசு தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து , ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க போலீசார், மதுவிலக்கு போலீசாருக்கு எஸ்பி சந்தீஷ் உத்தரவிட்டார். இதனடிப்படையில் ராமநாதபுரம் முழுவதும் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமநாதபுரம் சவேரியார் நகர் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக கிடைத்த தகவல்படி போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ராமநாதபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் குமார் எனவும், மனித உடலுக்கு பக்க விளைவு ஏற்படுத்தும் டெபண்ட்டாடோல் (Tapendadol ), டைடோல் (tydol) ஆகிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின்றி பலருக்கு விற்றது தெரியவந்தது. இதன்ப படி குமாரை, ராமநாதபுரம் பஜார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.