மேலிட ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தகராறு கூச்சல், குழப்பம் – அடிக்கடி தடை பட்ட ஆலோசனை கூட்டம்..
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக்குழு தலைவர் மலேசியா பாண்டி தலைமை வகித்தார். . கடந்த காலங்களில் ஏற்பட்ட உட்கட்சி பூசல், காழ்ப்புணர்ச்சி அரசியல் காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தேன். இங்கு உழைப்பவருக்கு மதிப்பில்லை. இனிமேல் நான் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளப் போவதில்லை என முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா பேசினார். அப்போது வட்டாரத் தலைவர்கள், தொண்டர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. இவர்களை மேலிட ஒருங்கிணைப்பாளர் சொர்ண சேதுராமன் அமைதிப்படுத்தினார். இதையடுத்து மீண்டும் துவங்கிய கூட்டத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர் கோட்டை முத்து கட்சியில் தனது கடந்த கசப்புணர்வுகளை பேசினார். காங்கிரஸ்காரர்களுக்கு ஏதேனும் கான்ட்ராக்ட் பணிகள் இருந்தால் ஏற்பாடு செய்து கொடுக்க கூட்டணி கட்சி எம்பியான நவாஸ் கனியிடம் முறையிட்டோம். ஒரு பலனுமில்லை. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி மட்டும் ஏதோ பயனடைந்து வருகிறார் என உண்மையை போட்டுடைத்தார். அப்போது குறுக்கிட்ட வேலுச்சாமி, இதையெல்லாம் கூட்டத்தில் சொல்கிறீர்களே என வருத்தமடைந்தார். நான் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு எந்த பொறுப்பும் தேவையில்லை. காங்கிரஸ் கட்சிக்காக எந்நேரமும் உழைக்க தயாராக உள்ளேன். ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி வைப்போம். கூட்டணி கட்சி வேட்பாளர் எனில் உண்மையாக உழைப்போம் என பொறுப்புக் குழு தலைவர் மலேசியா பாண்டி பேசினார். அப்போது தொண்டர்கள் இன்றைய ஆலோசனை கூட்ட பிளக்ஸ் போர்டில் காமராஜர் படம் இல்லை? என குரல் எழுப்பினர். கறை படாத கரங்களுக்கு சொந்தக்காரரான காமராஜர் நம் அனைவர் மனங்களிலும் நிறைந்துள்ளார் எனக் கூறி மலேசியா பாண்டி அமைதி படுத்தினார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தற்போது நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதால், ராமநாதபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட சீட் வாங்கித்தர வேண்டும் மீனவர் காங் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1371 பூத்களில் 1298 பூத் கமிட்டிகளுக்கு உறுப்பினர்கள் நியமித்து மாநிலத்தலைவர் அழகிரியிடம் பாராட்டு பெற்றுள்ளோம் என பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன் பேசியதாவது: நம்மிடையே உள்ள ஒரு குறைகளை பேசி தீர்த்து கொண்டு ஒற்றுமையுடன் செயல்படுவோம். மத அடையாளமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் இப்பேரியக் கம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி வெற்றிக்கு நாம் பாடுபடுவோம். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் கூட முழுமையாக உள்ள நிலையில், பாஜக அரசை வீழ்த்த இந்தியா கூட்டணி வெற்றிக்கு உழைப்போம் இவ்வாறு அவர் பேசினார்.தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன் சிறப்புரை ஆற்றினார். மீனவர் காங் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், கோட்டை முத்து, ராஜா ராம் பாண்டியன், மாநிலச் செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதி, ஜோதி பாலன், முத்து கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், இளைஞரணி தலைவர் விக்னேஸ்வரன், மகளிரணி தலைவர் ராமலட்சுமி, எஸ்சி., எஸ்டி., பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, மகளிரணி மாநில செயலாளர் பெமீலா, பொதுச் செயலர் ரமேஷ் பாபு, மாவட்ட மகளிரணி தலைவர் ராமலட்சுமி, செயலாளர் பிரமிளா, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹீம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சரவண காந்தி, விவசாய அணி மாவட்ட தலைவர் சுப்ரமணியன், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் கோதண்ட ராமன், வட்டாரத் தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









