இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் கடற்பாசி வளர்ப்போர் (ம) உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பதற்கான கருத்தரங்கு நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆட்சியர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தொழில் மூலம் வருவாய் கிடைக்கிறது. இக்கருத்தரங்கு மூலம் தாங்கள் செய்யும் உற்பத்தியை கடற்பாசியை விற்பனை செய்து தொழில் புரிய முடியும் என அறிந்து கொள்ளலாம். கடற்பாசி சாகுபடியாளர்களுக்கு கடனுதவி வழங்க NABARD வங்கி தங்களுக்கு உறுதுணையாக உள்ளது.
மீனவர்களின் வாழ்தாரத்தை உயர்த்தும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வளமாவூர் கிராமத்தில் கடற்பாசி பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவ மகளிருக்கு மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் மோனோ லைன் மிதவை மூலம் கடற்பாசி வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 305 மீனவ பெண்கள் இத்திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். 1050 மீனவ பெண்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு சார்பில் ரூ.27.17 லட்சம் மானியம் வழங்கப்படுள்ளது. தாது உப்புகள் அதிகம் நிறைந்த கடற்பாசிகளுக்கு ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளதால் இத்தகைய பாசிகள் சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கடற்பாசி வளர்ப்போரை ஒருங்கிணைத்து உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான கடன் வசதி, திறன் மேம்பாட்டு பயிற்சி, உட்கட்டமைப்பு வசதிகளை NABARD வங்கி நிதி உதவியுடன் ஏற்படுத்தி வியாபாரத்தை பெருக்க வழிவகை செய்கிறது. இத்திட்டம் மூலம் கடற்பாசி வளர்ப்போர், மீனவ பெண்கள், ஏற்றுமதியாளர் ஆகியோர் பயன் பெறுவர் என்றார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (கடல் மீன்வளம்), கூடுதல் இயக்குநர் ஆறுமுகம், தேசிய மீனவர் மேம்பாட்டு வங்கி நிர்வாக இயக்குநர் ஜாய்ஸ் ஆலிவ் ரெய்ச்சல், நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சுமித்ரா, மீன்வளம், மீனவர் நலத்துறை இராமநாதபுரம் மண்டல துணை இயக்குநர் பிரபாவதி, விஞ்ஞானிகள் வீரகுருநாதன் ஜான்சன் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.