ராமநாதபுரம் – கீழக்கரை உயர் மட்ட ரயில்வே மேம்பாலம் 30 கோடியில் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் திறந்து பயன்பாட்டுக்கொண்டு வர ராமநாதபுரம் நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
ராமநாதபுரம் – திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடிக்கு செல்லும் பேருந்துக்கள் சக்கரைகோட்டை, ஆர். எஸ்.மடை வழியாக செல்லும் பாதையில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் நிலையில்தான் உள்ளது. இதில், ரயில்கள் செல்லும் போது ரயில்வே கேட் அடைக்கப்படும்.
இதனால்,வாகனங்கள் காத்திருக்கும் நிலையில் காலையில் பள்ளி செல்லும் மற்றும் மாலையில், வீடு திரும்பும் மாணவ மாணவிகள், கூலி தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இந்த இடத்தில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என நகர் பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து கடந்த கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக திட்டம் வகுக்கப்பட்டு அதன் பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 30 கோடி மதிப்பிட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. உயர் மட்ட பாலம் மற்றும் இரு புறம் சேவைசாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட போது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால்,பாலப்பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் வழக்கு முடிந்து பாலப் பணிகள் தொடங்குவதில் ஒரு புதிய சிக்கல் உருவானது. குடிநீர் குழாய் செல்வதால் அதனை உடைத்து பாலம் கட்டுவதில் புதிய நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அதுவும் சரி செய்யப்பட்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டு பாலத்திற்கு தேவையான மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஆறு மாதத்திற்கு மேலாகியும் கூட இதுவரை பாலம் திறக்கப்படாமல் உள்ளது.
மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்னமும் திறக்கப்படாத நிலையில், அதற்குள்ளாக மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் விரிசல் ஏற்பட்டு அதனை மராமத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது மேம்பாலத்தின் மேலே ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாததால் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலம் திறப்பதற்குள் அதன் பலன் முடிந்து விடாமல் இருக்க நகர் பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம் – தூத்துக்குடி மேம்பாலத்தை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நகர் தலைவர் அப்துல் ஹக்கீம் செயலாளர் வதூதுத் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
You must be logged in to post a comment.