இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துகளில் குடும்ப உறவைப் பேணுவது அவசியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை உருவாக்க வேண்டும்.
மனிதருக்கான நட்பு என்பது அவரவர் தேடிக்கொள்வதாகும். ரத்த உறவுகள் என்பது அல்லாஹ் உருவாக்கி தருவதாகும். இறைவனால் ஏற்படுத்தப்பட்ட உறவுகளில், தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள், தாய் வழி சகோதர, சகோதரிகள். தந்தை வழி சகோதர, சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் என ரத்த உறவுகளின் தொடர்பு நீண்டு கொண்டே போகலாம்.
அல்லாஹ்வால் உருவாக்கி தரப்பட்ட ரத்த உறவுகளை பேணுவதிலும், அவர்களுடன் நட்பில் இருப்பதும் மார்க்க கடமைகளில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கிறாரோ அவர் குடும்ப உறவோடு சேர்ந்து வாழட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம்)
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னோடு சேர்ந்து வாழ்கிறானோ, நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கிறானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான். என பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி)
இந்த அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப் படுவதையும் நாம் காணலாம். நமது ரத்த உறவுகளுடன் நாம் பகைமை காணாமல் உறவு கொண்டு வாழ்வது அந்த ரத்த உறவை ஏற்படுத்தி தந்த இறைவனோடு நட்பு கொள்வதாகும்.
“இரத்த உறவு அர்ஷில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கிறானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்” எனக் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)நூல்: புகாரி, முஸ்லிம்)
இன்றைய நமது வாழ்வியல் சூழலோ அல்லாஹ்வினால் உண்டான ரத்த உறவுகளை பகையாக்கி கொண்டு விலகி வாழும் நிலைதான் நீடிக்கிறது. கொடுக்கல், வாங்கல், பாகப்பிரிவினை போன்ற சொத்துக்கள் விசயமெல்லாம் ரத்த உறவுகளை துண்டித்து வாழச்செய்கிறது.
நாம் துண்டித்து வாழ்வது நமது உறவுகளை மட்டுமல்ல, அல்லாஹ்வையும் தான் என்பதை கவனத்தில் கொள்வோமேயானால், இப்பொழுதே நமது உறவுகளை தேடிச்சென்று நட்பு பாராட்டுவோம்.
சுவனத்திற்கு செல்லும் வழியையும், நரகத்தில் இருந்து பாதுகாப்பையும் தரும் ஒரு அமலை எனக்கு கற்றுத்தாருங்கள் என நபித்தோழர் ஒருவர் பெருமானார்(ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதற்கு அண்ணலார் கூறிய பதிலை
இன்ஷா அல்லாஹ்…
ரமலான் சிந்தனை 26ல் காணலாம். கீழை ஜஹாங்கீர் அரூஸி.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









