இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஓரிரு தினங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுசுகாதாரம், நகராட்சி, பேரூராட்சிகள் உள்பட அனைத்து துறையினர் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மருத்துவ முகாம்கள் அமைக்க உரிய பணியாளர்களை பொதுசுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகள் தங்கள் பகுதிகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து தேவையான அளவு மின் மோட்டார்கள் இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். கனமழை அதிகமாக பெய்யும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்கவைக்க ஏதுவாக உள்ள இடங்களை முன்கூட்டியே பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கும் வகையில் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.