நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த கடுமையான வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் கொளுத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை முதலில் மிதமாக பெய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கனமழையாக பொழிந்தது.தூத்துக்குடி நகர் பகுதியான முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக இந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் அடித்த நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி தாராளமாக நடைபெறும். ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கடுமையாக அவதிக்குள்ளான மக்கள் இன்று பெய்த கனமழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேல தட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, தளவாய்புரம், வாகைகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை பெய்தது.தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன் கோவில், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் வெயில் அடித்தது.நெல்லையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதானபுரம், மார்க்கெட் பகுதி, பாளை பஸ் நிலைய பகுதிகளில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









