அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் பல பகுதிகளில் கோடை வெப்பம் தகிக்கும் நிலையில் கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து குளிர்வித்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை சுற்றுவட்டாரத்தில் செவ்வாய் கிழமை அதிகாலை பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளுவாம்பட்டி, நாதேகவுண்டன் புதூர், மத்தவராயபுரம் உள்ளிட்ட இடங்களில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் இருந்த 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
அதில், சில வீடுகளின் சுவர்கள் சேதமடைந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
மத்தவராயபுரத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மக்கள் ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் நிலையில், மழையால் வீடுகளும் சேதமடைந்ததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சேலத்தில் பகல் நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்தது
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது.
வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டுவந்த நிலையில், இந்த மழையால் சற்று நிம்மதியடைந்தனர்.
திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது
இதனிடையே தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான வாழைமரங்கள் முறிந்து சேதமடைந்தன.
மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









