ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் ..தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.சுற்றுலா தலமான ஊட்டிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். சுற்றுலா பயணிகள் சிலர் நூற்றாண்டு பழமையான மலை ரெயிலில் பயணம் செய்து இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான புல்வெளிகள், மலை, அருவி உள்ளிட்டவைகளை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மலைரெயிலில் பயணம் செய்யும்போது பயணிகள் சிலர் உற்சாக மிகுதியால் ஆபத்தான பாலங்கள், குகைகள் வரும்போது ரெயிலில் தொங்கியவாறு செல்பி எடுக்கிறார்கள்.

மேலும் மெதுவாக ரெயில் ஓடும்போது என்ஜின் முன்பு நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். சிலர் மலைரெயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுக்கிறார்கள். ரெயில்வே ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் உயிருடன் விளையாடுகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் தெற்கு ரெயில்வே அதிரடி அறிவிப்பை வெளியிடுள்ளது.அதன்படி தண்டவாளத்தில் புகைப்படம் ‘செல்பி’ எடுத்தால், ரூ.2 ஆயிரம் அபராதம், ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடந்தால் ரூ.1,000 அபராதம், டிக்கெட் இன்றி பிளாட்பாரங்களில் இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் ரெயில் நிலையம், தண்டவாளங்களில் குப்பை போட்டால், ரூ.200, அசுத்தம் செய்தால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு துண்டு பிரசுரங்கள், ஊட்டி, குன்னூர், கேத்தி ரெயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!