மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது.அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றிய அமைச்சர் அம்திஷாவின் இப்பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் இவரது பேச்சை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இரண்டாவது நாளாக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, இந்தியா கூட்டணியின் போராட்டதை சிதைக்கும் வகையில் பா.ஜ.க MPக்கள் இவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல முயன்றபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ”அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியாக போராட்டம் நடத்தினோம். நாடாளுமன்றம் தொடங்க 5 நிமிடங்கள் இருந்ததபோது, நாங்கள் உள்ளே செல்ல முயன்றபோது பா.ஜ.க MPக்களால் தடுத்து நிறுத்தப்பட்டோம்.அப்போது நான் தடுமாறி விழுந்தேன். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டனர்.தற்போது பா.ஜ.க திசை திருப்பும் செயலில் இறங்கியுள்ளது. இதில் காங்கிரஸ் சிக்காது. அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

You must be logged in to post a comment.