10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!தமிழக அரசின் அறிவிப்புக்கு; எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு..

10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!தமிழக அரசின் அறிவிப்புக்கு; எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு..

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இரு முறை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி பொதுத்தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை ஆயத்தப் பணிகளை மேற்கொண்டது.

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றமும் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது தேர்வைத் தள்ளி வைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின்னர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டுப் போன பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவின் அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு காலதாமதாக மேற்கொள்ளப்பட்டது என்றாலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!