ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதி முழுவதிலுமிருந்து வெளியேறும் சாக்கடை நீர் நேரடியாக கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கீழக்கரை நகராட்சியில் கிட்டத்தட்ட 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக, நேரடியாக கடலில் கலக்கிறது. இவ்வாறு தினமும் 12 லட்சம் லிட்டருக்கும் அதிகமான கழிவுநீர் கடலில் கலக்கிறது.
இதனால் கடலின் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கடலில் கலப்பதால் மீன்வளம் குறைந்து வருவதுடன் தற்போது நோய் தொற்று பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்..
இப்பகுதி மன்னார் வளைகுடாவில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட அரிய வகை உயிரினங்கள், பவளப்பாறைகள், கடல் பாசிகள், கடல் புற்கள் உள்ளன. மீன்களுக்கு பெரும் உணவாக கடல் பாசிகள் உள்ளன. பவளப் பாறைகள் கடல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியை செய்கின்றன. இவற்றில்தான் மீன் இனங்களும் அரிய வகை உயிரினங்களும் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. சர்வதேச அளவில் மன்னார் வளைகுடா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஆனால், நகராட்சியின் அனைத்து பகுதியிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கடலில் கலப்பதால் கீழக்கரை பகுதி கடலில் மீன்வளம் குறைந்து விட்டதாகவும், எதிர்காலத்தில் முற்றிலும் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளதாகவும் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பவளப்பாறைகளும் அழியும் அபாயம் இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதி கடலுக்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் ‘மனோ தங்கராஜ்’ இதை பார்த்து முகம் சுழித்து விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு சென்றுள்ளார். ஆனால், அமைச்சரின் வார்த்தைக்கு கூட நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்காமல் உள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், கடந்த 2010 திமுக ஆட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு பின்பு கைவிடப்பட்டது. அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பண்டைய காலத்தில் துறைமுகமாக திகழ்ந்த கீழக்கரை கடற்கரை பகுதி தற்போது கடல்வாழ் உயிரினங்கள் வாழ தகுதியற்ற அபாயகரமாக சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. எனவே, இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
You must be logged in to post a comment.