அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வலியுறுத்தி TARATDAC சார்பில் 18.06.19 இன்று மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் வீரலப்பட்டி பிரிவு என்னும் இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டாரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இவர்களில் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். உடலில் பல்வேறு அங்க குறைபாடுகளுடனும் நோயுடனும் வருகை தரும் மாற்றுத்திறனாளிகளும் நோயாளிகளும் வந்து செல்ல வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்படாமல் ஐந்து படிக்கட்டுகளுடன் மிகவும் உயரமாக மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் அமைந்திருப்பதால் மிகுந்த சிரமத்தை நாள்தோறும் நோயாளிகள் அனுபவித்து வந்தார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கடந்த ஓராண்டிற்கும் முன்னதாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வலியுறுத்தி மனு அளித்தும் பலனில்லாத காரணத்தால் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது.
போராட்ட அறிவிப்பின் பலனாக பேச்சுவார்த்தைக்கு வந்த அரசு நிர்வாகம் மூன்று மாதத்திற்குள் சாய்வுதளம் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அரசு ஒத்துக்கொண்ட மூன்று மாத காலம் நிறைவடைந்தும் இன்றுவரை சாய்வுதளம் அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று வீரலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒட்டன்சத்திரம் ஒன்றிய தலைவர் துரைராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி நகர செயலாளர் தங்கவேல், ஒட்டன்சத்திரம் ஒன்றிய தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றியதுடன் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளவசதி ஏற்படுத்திட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.
ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தின் பலனாக உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வந்த அரசு அதிகாரிகள் இன்னும் 45 நாட்களுக்குள் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தருவதாக உறுதிமொழி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












