வேட்பாளர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த பெயர் 9வது இடத்திற்கு மாறியதைக் கண்டித்து, அரவக்குறிச்சி சுயேச்சை வேட்பாளர் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், அரசியல் கட்சி வேட்பாளர்களுடன் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில், அதன் தலைவர் இரமேஷ் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இவர், மகாத்மா காந்தி போல ஆடை உடுத்தி, கையில் ஊன்றுகோலுடன் சைக்கிளில் சென்று, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆசியா மரியத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வேட்பாளர் பட்டியலில் இவருடைய பெயர் அகர வரிசைப்படி 4வது இடத்தில் இருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப்பட்டியலில், இவருடைய பெயரின் முதல் எழுத்தான ‘இ’ என்பது நீக்கப்பட்டு ‘ரமேஷ்’ என்று குறிப்பிட்டு 9வது இடத்தில் உள்ளது.
4வது இடத்தில் இருந்த பெயர் 9வது இடத்திற்கு மாறியதைக் கண்டித்து, தேர்தல் கமிஷனுக்கும் அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4ம் தேதி மனு அளித்திருந்தார். ஆனால், நேற்று வரை அந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால், வேட்பாளர் பட்டியலில் தமிழ் அகர வரிசைப்படி சரியான இடமான 4வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, தனது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகமான அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், தேர்தல் நடத்தும் அலுவலரான மீனாட்சியிடம் ரமேசை அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், ‘இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்’ என தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். இதையடுத்து, ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சுயேச்சை வேட்பாளர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












