தமிழகத்தில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி! ரோட் ஷோ நடத்தவும் திட்டம்..

பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.எனவே தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி 5 தடவை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தார். கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.கோவையில் சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவும் நடத்தினார்.மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சென்னை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.இதற்கான பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் முடிவாகி விடும்.9-ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென் சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது.இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகிய இடங்களை இணைக்கும் வகையிலும், இதே போல் மேலும் 2 இடங்களையும் தேர்வு செய்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களின் முடிவை பொறுத்து இடம் உறுதி செய்யப்படும்.சென்னை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமானத்தில் திருச்சி செல்கிறார்.அன்றைய தினமே வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கேரளா செல்கிறார்.அதன் பிறகு மீண்டும் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய வருவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ராகுல்காந்தி 11-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்குள் ஒருநாள் தமிழகம் வருவதற்கு ஒத்துக் கொண்டு உள்ளார். ஒரே நாளில் 3 அல்லது 4 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாராகிறது.கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் நெல்லையில் ஒரு இடத்தில் பிரசாரம் செய்கிறார்.கடலூர், மயிலாடுதுறையை இணைத்து ஒரு இடத்தில் பேசுகிறார்.மேலும் திருவள்ளூர், கரூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வருகிறார். அவர் வரும் தேதி இன்னும் உறுதியாகவில்லை.கர்நாடகா மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு பெங்களூரில் இருந்து ஓசூர் வருகிறார். அங்கிருந்து சேலம் வரை ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!