2 நாள் அரசுமுறைப் பயணமாக குவைத் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் மன்னர் ஷேக் மெஷாலை சந்தித்த மோடி, இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி துறை உள்ளிட்டவை குறித்து பேசினார்.
குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரணமான சூழல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 43 ஆண்டுகளில் குவைத் பயணம் மேற்கொண்டுள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு, குவைத் நாட்டின் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான, ‘ஆப் முபாரக் அல் கபீர்’ விருது அவருக்கு வழங்கப்பட்டது. உலக நாடுகள் பிரதமர் மோடிக்கு வழங்கும் 20வது சர்வதேச விருது இதுவாகும். இந்தியா- குவைத் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள தொழிலாளர் முகாமில் இந்திய தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய மோடி, குவைத்தில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக அளிக்கும் பங்களிப்பை சுட்டிக்காட்டினார். அயல்நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், நம் நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று விரும்புவதைப் போன்றே தாமும் 2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசி வருவதாகவும் மோடி கூறினார்.
You must be logged in to post a comment.