ராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் வருகை ! மூன்றடுக்கு பாதுகாப்பு மாவட்ட எஸ்பி தகவல் !!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 20.01.2024 மற்றும் 21.01.2024 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் தங்குமிடத்தில் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அருள்மிகு இராமநாதசாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு, கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மூலம் ரோந்து செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள அந்நிய சந்தேக நபர்கள் எவரேனும் தங்கியிருக்கின்றனரா என தீவிர பரிசோதனை செய்து, இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மண்டபம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளவர்களின் விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இராமேஸ்வரம் பகுதி முழுவதும் காவல்துறையின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க செய்யும் நிபுணர் குழுவினர் (BDDS TEAM) மற்றும் வெடிகுண்டு மோப்ப நாய் (DOG SQUAD) படையினர் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு கூடுதல் காவல்துறை இயக்குனர்  மேற்பார்வையில், 03 காவல்துறை துணைத்தலைவர்கள், 14 காவல் கண்காணிப்பாளர்கள், 13 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 3400 காவல்துறையினர் மற்றும் 14 வெடிகுண்டு நிபுணர்கள் குழு உள்ளடக்கிய காவல்துறையினர் நியமிக்கப்பட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் செய்தியின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!