சென்னை மழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா பாராட்டியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், பருவமழை பாதிப்புகளிலிருந்து மக்களை குறிப்பாக சென்னை மக்களை காப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுத்த துரிதமான முன்னெச்சரிக்கைகளால் பாதிப்புகள் ஏதும் இன்றி சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பாராட்டி இருப்பதும் பெருமைப்படத் தக்க ஒன்றாகும். இந்தப் பாராட்டினை வரும் புது ஆண்டில் தொடங்கும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தனது உரையில் பதிவு செய்வார் மேதகு ஆளுநர் என நம்புகிறேன். மேலும், முதல்வரின் ஆலோசனையின் பேரில் துணை முதல்வர் உதயநிதி ஆற்றிய பணிகள் வெகுவாய் மக்களை சென்றடைந்திருக்கிறது.
துணை முதல்வராக பதவி ஏற்ற உதயநிதியின் பணிகளுக்கு கிடைத்திருக்கின்ற அங்கீகாரமாக இந்தச் சாதனையை பார்க்கலாம். அண்மையில் நடைபெற்ற சாம்சங் தொழிலாளர் போராட்டத்தினை முதல்வர் ஆலோசனையின் பெயரில் அமைச்சர் பெருமக்கள் பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அரசு தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இருவருக்குமான அரசு என்றாலும், தொழிலாளர்களின் நலன் காப்பதில் என்றைக்கும் சளைத்த அரசு அல்ல என்பதை இந்த செயலின் மூலமாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர். அமைச்சர் பெருமக்கள், சென்னை மாநகர மேயர், துணை மேயர் மற்றும் அரசு அலுவலர்கள் குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் என அத்தனை பேரின் இடைவிடாப் பணிகளை நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம் பாராட்டி மகிழ்கிறது. அரசோடு ஒத்துழைப்பு வழங்கிய சென்னை மாநகர பொதுமக்களுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. இவ்வாறு கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.