தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை கரும்பு , புத்தாடை , பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது
தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினார்கள் .
தஞ்சை மாநகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 பேர் என மொத்தம் 610 பேர் தினமும் தஞ்சை மாநகர் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . நகரை தூய்மையாக வைத்திருக்க அயராது பாடுபடும் இத்தகைய தூய்மை பணியாளர்களை தைத்திருநாள் தமிழர் பண்டிகையை முன்னிட்டு கௌரவித்து ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சையை சீர்ப்படுத்தும் சிப்பாய்களுக்கு சீர்வரிசை என்ற தலைப்பில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .
நாஞ்சிக்கோட்டை சாலை பர்வீன் திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்து புறப்பட்ட தூய்மை பணியார்களுக்கான பொங்கல் சீர் வரிசை ஊர்வலத்தில் 50 பெண்கள் 25 வகையிலான பொருட்களை தாம்பூல தட்டுக்களில் சுமந்து வந்தனர் .
வழி நெடுக தாரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் சென்ற இந்த ஊர்வலம் மாதவராவ் நகரில் உள்ள தஞ்சை மாநகராட்சி 12வது கோட்ட துப்புரவு ஆய்வாளர் அலுவகத்தில் நிறைவடைந்தது . கோட்ட துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார் .
பின்னர் நடந்த நிகழ்வில் மாநகராட்சி 12வது கோட்ட தூய்மை பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 500 ரூபாய் ரொக்கம் , 1000 ரூபாய் மதிப்பிலான புத்தாடை , கரும்பு , பொங்கலுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன .ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் இதனை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.
. அப்போது அவர் பேசுகையில் தஞ்சை நகரத்தையும் தஞ்சை மக்களையும் நோய் நொடியிருந்து பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் . தூய்மை பணியாளர்களை சகோதர சகோதரிகளாக பாவித்து தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து இவ்வகையான சீர்வரிசைகளை தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் பொங்கலை முன்னிட்டு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார் .
தமிழர் திருநாளில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான சீர் வரிசை கொடுக்கும் நிகழ்வை போன்றே தூய்மை பணியாளர்களுக்கு ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று சீர் செய்து அசத்தியது தஞ்சை மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்து உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி நிர்வாக உதவியாளர் குகனேஸ்வரி தன்னார்வலர்கள் ஆர்த்தி , கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .
You must be logged in to post a comment.