பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்.
தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.
கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு. பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை – பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் – ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.
ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.
ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும். திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதைவிட, அதனால் பயனடைந்து வரும் மக்களும், இத்தகைய திட்டங்களால் தமிழ்நாடு கண்டுள்ள வளர்ச்சியை உணர்ந்துள்ள பல்வேறு துறைகளின் பிரமுகர்களும் தங்களின் உள்ளத்திலிருந்து பேசுவதை, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’, ‘உலகம் உங்கள் கையில்’ உள்ளிட்ட நிகழ்வுகளில் கண்டோம். இதுதான் திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பியுள்ள இன்றைய தமிழ்நாடு. எனினும், இது போதாது என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய எண்ணம். இன்னும் பல உயர்வுகளை நாம் அடைந்திட வேண்டும். அதற்கேற்ப நம் அரசு உழைத்திடும். உழைக்கின்ற மக்களின் உணர்வுகளை மதித்திடும்.
1 கோடியே 30 இலட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 இலட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது. தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று. தமிழ்நாட்டின் பத்தாண்டுகால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.
கழகத்தினருடன் பொதுமக்களும் இந்தப் பொங்கல் விழாக்களில் பங்கேற்று, திராவிடப் பொங்கலைக் கொண்டாடி வருவதைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்புகிறது. பொங்கல் விழாவையொட்டித் தலைமைக் கழகம் அறிவித்தவாறு, கழகத்தினர் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை, தொடர்ந்து நடத்தி வருவதுடன், கோலப் போட்டிகளும் மிகப் பிரம்மாண்டமான முறையிலே நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.
உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன.
கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளேன்.
தமிழரின் தனிப்பெரும் திருவிழாவாக பொங்கலைக் கொண்டாடும் பண்பாட்டு மரபை மீட்டெடுத்ததில் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்கு முதன்மையான பங்கு உண்டு. மாநகரம் தொடங்கி சிறு கிராமம் வரை தமிழர்களின் மரபை உணர்த்திடும் வகையிலான கலை – இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்துவதை திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முக்கால் நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறது.
தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.
தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன். சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் – தைப்பொங்கல் வாழ்த்துகள்!
அன்புடன் மு.க. ஸ்டாலின்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









