புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோக்கு ‘நோ’  காவல்துறை உத்தரவு!!

புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோக்கு ‘நோ’  காவல்துறை உத்தரவு!!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்பு மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஆனால், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தினார்.பின்னர், இத்தகைய கூட்ட நெரிசலை தடுக்கும் நோக்கில் த.வெ.க சார்பில் “மக்கள் பாதுகாப்பு படை” எனும் புதிய தொண்டர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இவர்களுக்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அதன்பிறகு சேலத்தில் நடைபெற இருந்த மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரப்பட்டபோதும், அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கில் கட்சி நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வை விஜய் நடத்தியார்.

இதில் QR கோடு கொண்ட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த முறையும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க எடுத்த நடவடிக்கையாக கருதப்பட்டது.இதற்கிடையில், புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் ரோடு ஷோவையும் நடத்த விஜய் முடிவு செய்தார்.

இதற்காக த.வெ.க நிர்வாகி புதியவன் தலைமையில் புதுச்சேரி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 25 கி.மீ தூரம் கொண்ட பாதையில், காலாப்பட்டு எல்லையிலிருந்து கன்னியக்கோவில் வரை மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் உப்பளம் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் விஜய் உரையாற்றவும் அனுமதி கேட்டிருந்தனர்.

ஆனால், அதே நேரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்தைக் காரணமாகக் கொண்டு, ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என டிஜிபியிடம் மனு அளித்தனர். பாதுகாப்பு ஆபத்து உள்ளதாகவும், வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலைமைகளை அனைத்தையும் பரிசீலித்த புதுச்சேரி காவல்துறை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்து அதிக மக்கள் திரள வாய்ப்புள்ளதால், கரூரில் ஏற்பட்ட நிலை மீண்டும் உருவாகக் கூடும் எனக் கருதி, டிசம்பர் 5ஆம் தேதியிலான விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்துள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!