வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுவை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது கிடைத்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு நாள்களில் நகரக்கூடும்.
அதன் காரணமாக 17.12.2024 முதல் 19.12.2024 தேதிகளில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மற்றவர்கள் புதுச்சேரி கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த அறிவிப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அவ்வப்பொழுது வெளியிடப்படும் அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.