2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி நடத்துதல், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் “வீலிங்” செய்தல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இது பற்றிய செய்திக்குறிப்பு: 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி யாராவது DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
2026ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான வியாழக்கிழமை அன்றும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் பொது இடங்களில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து “பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகள் பறிமுதல் செய்யப்படும், அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.
சாலையில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் “வீலிங்” செய்வதும், அஜாக்கிரதை மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும், பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.அரவிந்த் உத்தரவின்படி 32 இருசக்கர வாகனம் மற்றும் 18 நான்கு சக்கர வாகன ரோந்து வாகனங்கள், 900 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முக்கியமாக பொதுமக்கள் வழிபடும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் தென்காசி மாவட்ட காவல் துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

