தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளனர் எனக் கூறி, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெற்ற காவலர்கள் நீதிமன்ற அலுவல் பணிக்கு செல்லும் போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த கோரிக்கை மனுவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம் என்பவர் இரவு ரோந்து பணியின் போது, வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில், இதே போல் நாள்தோறும் பல்வேறு இடங்களில் தமிழகத்தில் காவலர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு இன்னல்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தமிழக அரசு வழங்கி காவலர்கள் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம், மதுரை மாவட்டம் நாகலாபுரம், சென்னை, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஆயுதப்படை காவலர் ஒருவர் கொலை என தமிழகத்தில் மட்டும் பல்வேறு சூழ்நிலைகளில் 6 காவலர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நாள் தோறும் பல்வேறு பாதுகாப்பு இன்னல்களுக்கு போலீசார் ஆளாகி வருவதால், தற்போது பணியில் இருக்கும் காவலர்களுக்கும், ஓய்வு பெற்ற காவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்றும் அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோரை சந்தித்து இந்த கோரிக்கை மனுவினை அளித்த நிலையில், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்வருக்கு உடனடியாக தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர்கள் அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.