இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சுற்றுப்புற தூய்மையினை பாதுகாத்திடும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருகின்ற 01.07.2018 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில்: பொதுமக்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் மாவட்டத்தில் சுற்றுப்புறத் தூய்மையினை மேம்படுத்திடும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பொதுமக்களின் வசிப்பிடங்கள், அதன் சுற்றுபுறங்கள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய வகையில் கழிவுப் பொருட்கள், தேங்கிக்கிடக்கா வண்ணம் உடனுக்குடன் அப்புறப்படுத்திட வேண்டுமென உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டளையிட்டு கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில் சுற்றுப்புற தூய்மையைப் பாதுகாப்பதில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மிகுந்த இடையூறாக உள்ளது. பிளாஸ்டிக்கானது மக்கும் தன்மை இல்லாதிருப்பதால் மழைநீரை நிலத்தடிக்குள் செல்லவிடாமல் தடைசெய்ய கூடியதாகவும், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏ.டீ.எஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாக சாதகமாக அமைகின்றது. இத்தகைய சூழ்நிலைகளை தவிர்த்திட ஏதுவாக பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை 01.01.2018 முதல் முற்றிலும் தடை செய்வதென தீர்மானித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீர்மானம் நிறைவேற்றியும், பல கிராமச் சபை கூட்டங்களில் பொதுமக்களின் ஒப்புதலுக்கு வைத்தும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் முற்றிலுமாகவும், கிராமப்புறங்களில் ஓரளவிற்கும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை அமல்படுத்தப்பட்டது. ஆனால் சமீப காலமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தற்போது தமிழக முதலமைச்சர் 01.01.2019 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு தடைசெய்யப்படும் என அறிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை மாநில அரசின் அறிவுரைப்படி ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாடு தடை நடைமுறையில் உள்ளது. தற்போது தமிழக முதலமைச்சர் அறிவிப்பிற்கு வலுசேர்க்கும் விதமாகவும், இராமநாதபுரம் மாவட்ட மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு மழைநீர் தங்குதடையின்றி முழுமையாக நிலத்தடிக்குள் சென்று நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 01.07.2018 முதல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடைசெய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்களும், வணிகர்களும், நுகர்வோரும் மற்றும் சுற்றுலா பயணிகளும் இந்த பிளாஸ்டிக் பயன்பாடு தடை நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதனை கண்காணிப்பதற்கு துணை ஆட்சியர் மற்றும் உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வறிவிப்பை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் முதல்கட்டமாக 15.07.2018 முதல் ரூ.500/-க்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டறியப்படும் ஒவ்வொரு முறையும் ரூ;1000/-க்கு குறையாமல் அபராதம் விதிப்பதுடன் ஒத்துழைக்க மறுக்கும் வணிகர்களது வணிக உரிமத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்
தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












