தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் (https: //tenkasi.nic.in.) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2024. விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் அல்லது நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) இரண்டினை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









