பாப்லோ பிக்காசோ (Pablo Picasso) அக்டோபர் 25, 1881ல் ஸ்பெயின் (எசுப்பானியா) நாட்டிலுள்ள மலகா என்னுமிடத்தில், ஜோச் ரூயிசு பால்சுகா, மரியா பிக்காசோ தம்பதியருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார். பிக்காசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. பிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார். தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காசோ நன்கு கற்றுக்கொண்டார். 1891ல் பிக்காசோவினுடைய குடும்பம் கொருணா என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்தது. நான்கு ஆண்டுகள் பிக்காசோவின் தந்தையார் அங்குள்ள ஓவியப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அங்குதான் தனது மகனின் முடிவுறாத புறா ஓவியத்தைக் கண்ணுற்றார். அது புதிய பாணியைக் கொண்டிருந்தது. மேலும் அபொக்ரைபா என்ற கதையைத் தழுவியதாகவும் இருந்தது. 13 வயதே ஆன தனது மகனின் ஓவியத் திறமையைக் கண்ட ரூயிஸ் மிகுந்த வியப்புக்குள்ளானார்.
பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப் பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். நீலக்காலப் பகுதி (1901 – 1904), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நில சிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. ஸ்பெயினில் இவர் மேற்கொண்ட சுற்றுப் பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர். ரோசா நிறக் காலப் பகுதி (1904 – 1906), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் ரோசா நிற (ஜிink) சித்திரங்கள் ஆகும். இளைஞர்கள், தலைமுடி வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம், வானர மனிதர்கள் என்பன இக்கால கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களாகும். ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908 – 1909), ஆப்பிரிக்கக் கலைப்பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப் பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.
பகுப்பாய்வுக் கியுபிசம் (1909 – 1912) இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உருவாக்கிய ஓவியப் பாணியாகும். இந்த ஓவியங்கள் மண்ணிறத் தன்மை கொண்ட ஒரு நிற ஓவியங்களாக இருந்தன. இவ்வோவியங்களில் கருவாக அமைந்த பொருட்களை வடிவங்களின் அடிப்படையில் பிரித்தெடுத்து வரையும் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. இக்காலப் பகுதியில் இவ்விரு ஓவியர்களினதும் ஓவியங்கள் ஒன்று போலவே அமைந்திருந்தன. பிகாசோவின் வாழ்வையும் படைப்புக்களையும் குறித்து சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிக சிறப்பு வாய்ந்த திரைப்படம் ‘த மிஸ்டரி ஒப் பிக்காசோ’ ஆகும். இது 1955 ஆம் ஆண்டு வெளியாகியது. பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதனை திரைப்படமாக்கினார்கள். ஓவியங்களை திரைப்படமாக்குவது என்பதில் இத்திரைப்படம் முன்மாதிரியாகவுள்ளது. 1996ல் சேர் வைவிங் பிக்காசோ எனும் திரைப்படம் ஜேம்ஸ் ஐவரி இயக்கத்தில் இஸ்மாயில் மொசன்ட் தயாரிப்பில் வெளியானது. இதில் அண்டனி ஹாப்கின்ஸ் பிகாசோவாக நடித்திருந்தார்.
‘பிக்காசோ – த மான் அண்ட் ஹிஸ் வார்க்’ என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது. சிறுவயதில் திறமையாக ஓவியங்கள் வரைந்ததால் பிகாசோவுக்கு ஓவியக் கல்லூரியில் சேர அனுமதி கிடைத்தது. தைலவண்ண ஓவியங்களை வரைவதில் ஈடுபாடு காட்டினார். அவர் ஸ்பெயினில் இருந்து பாரிசிற்கு இடம்பெயர்ந்தார். நண்பரின் அறையை பகிர்ந்துகொண்டு ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களை நீலவண்ண ஓவியங்கள் என வகைப்படுத்துகின்றார்கள். அதாவது ஓவியத்தின் பிரதான நிறமாக நீல நிறம் அமைந்திருந்தது. தனிமையும் துக்கமும் இந்த நிறத்தை இவர் தெரிவுசெய்ய காரணமாக இருந்திருக்கிறது. அவரது நெருக்கமான பெண் தோழியாக பெர்னாண்டோ ஒலிவர் காணப்பட்டார். பின்னர் பிகாசோவிற்கு ஈவா கோவல் என்ற பெண்ணோடு நட்பு உருவானது. அதன்பின் ஒல்காகோக்லவோ என்ற ரஷ்ய பாலே நடன பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டார் பிக்காசோ. அவர்களுக்கு பாப்லோ என்ற மகன் பிறந்தான்.
இவரது ஆக்கங்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவையாகும். அவற்றில் 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் என்பன அடங்கும். இவை பிரான்சின் பாரிஸ் அரும்பெருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவிக்னோக் பெண், பர்ட்டாட் சிடின் சித்திரம், பெண் கதிரையில் உள்ள சிற்பம், குட்டையான நடனக்காரர், நோயாளிக் குழந்தை, இத்தாலியப் பெண்கள், அழும் பெண், மனிதனின் மூன்று யுகங்கள், பெண்ணின் உடல், கிட்டார், இரண்டு குழந்தைகள், மரத்தின் கீழ் நாய் மற்றும் குவர்னிகா ஆகியன இவரது பிரபல படைப்புக்களாகும். முதலாம் உலக மகா யுத்தத்தில் குவர்னிகா நகருக்கு குண்டு பொழியப்பட்டத்தை மையமாகக் கொண்டு குவர்னிகா சிற்பம் செருக்கப்பட்டது. ‘கொலாச்’ சித்திர வேலைப்பாட்டை பயன்படுத்தி இதனை அலங்காரம் செய்துள்ளார். யுத்தத்தின் கொடூரத்தன்மை, தனிமை, புலம்பல் ஆகிய வெளிப்பாடுகள் இச்சித்திரத்தின் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த சிற்ப வேலைப்பாடுகள் நியூயோர்க்கில் உள்ள அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பப்லோ பிக்காசோ தன் தொண்ணூறாவது பிறந்த நாளை பொதுமக்களுடன் கொண்டாடினாராம். தொண்ணூறு வயதிலும் அவரின் தூரிகை காயவில்லை. அந்த 90 ஆவது பிறந்தநாள் விழாவில் கடந்த ஒரு மாதத்தில் தான் வரைந்து எட்டு ஓவியங்களை பாரிஸ் ஜாவர் அருங்காட்சிக்கு வைத்து அசத்தினாராம் பிகாசோ. தொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிக்காசோ. வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட பிகாசோ ஏப்ரல் 8, 1973ல் தனது 93வது வயதில் பிரான்ஸில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது உடல் பிரான்ஸின் தெற்கில் உள்ள வாவெனார்கஸ் கிராமத்தில் உள்ள செட்யூ என்ற இடத்தில் உள்ள அவரது ஸ்ரூடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









