தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பாம்பூரணி வடக்கரை பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி தட்சணாமூர்த்தியின் மனைவி கீதா என்பவர், தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக தனது கருப்பை அகற்ற நேர்ந்துள்ளதாகக் கூறி, குற்றம் சாட்டிய மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தற்போது ஒரு குழந்தையின் தாயான கீதா, இரண்டாவது குழந்தை கருவுற்ற நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கருக்கலைப்பு செய்ய தீர்மானித்து, பாரதிநகர் மீன்கடை சந்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் வள்ளிப்பிரியாவை அணுகியதாக கூறுகிறார்.
அவர் கொடுத்த கருத்தடை மாத்திரைகள் வேலை செய்யாததால், பின் ரூ.25,000 வாங்கி சின்னக்கடையில் உள்ள ராசி மருத்துவமனையில் DNC (கருக்கலைப்பு அறுவை சிகிச்சை) செய்யப்பட்டது. அதன்பின் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, கடும் வயிற்று வலி, காய்ச்சல் காரணமாக மருத்துவரை தொடர்பு கொண்டபோது, ஊசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியதாகவும், பின் மேலும் பரிசோதனைகளுக்காக அழைத்தபோது தான் கருப்பை மற்றும் குடல்களில் ஓட்டை விழுந்திருப்பது தெரிய வந்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறிய டாக்டர் வள்ளிப்பிரியா, தனது தவறுக்காக ரூ.15,000 கொடுத்து மன்னிப்புக் கேட்டதாகவும், பின்னர் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும், அதனடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கும் செல்ல அறிவுறுத்தியதாகவும் கீதா தெரிவித்துள்ளார்.
அங்கு மேற்கொண்ட சோதனைகளில் உடனடி அறுவை சிகிச்சை அவசியம் எனக் கூறப்பட்டு, 5.45 மணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரது கருப்பை அகற்றப்பட்டதாகவும், இதனால் அவர் உடல் மற்றும் மன ரீதியாக கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தவறான சிகிச்சையால் அவரது வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய கீதா, மருத்துவர் வள்ளிப்பிரியாவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து, தமக்கு நியாயம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.