பெரியாரைப் பற்றி சர்ச்சை கருத்து! சீமான் மீது குவியும் புகார்கள்..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காரை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குவியும் புகார்கள்:

இந்நிலையில், திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், திமுக நிர்வாகி ரகு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர் தனித்தனியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ்:

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் பேசுகையில்… ”தங்கசாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில், எந்தவித ஆதாரமும் இல்லாமல் சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது. அரசியலில் பெரும்பாலான தொண்டர்கள் நாதக-வில் விலகி விட்டனர். அதனால் சீமானின் அரசியல் வாழ்க்கை படும்பாதாளத்திற்கு சென்று விட்டது. அதனால் அரசியல் வியாபாரத்திற்காக சீமான் பேசி வருகிறார்” என்று தெரிவித்தார்.

திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி:

இதே போல திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி பேசுகையில், ”சீமான் தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார். சீமான் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி:

இதனை தொடர்ந்து பேசிய தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, ”சீமான் ஏற்கனவே தமிழ் தாய் வாழ்த்தை இழிவு செய்தார். அதே போல திண்டுக்கல் டி.ஐ.ஜியை இழிவாக பேசி இருக்கிறார். தற்போது பெரியாரை அவமதித்து இருக்கிறார். இந்த முறையாவது சீமான் மீது கண்டிப்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

சீமான் மீது ஒரே நாளில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 4 புகார்கள் குவிந்துள்ளன. இதையடுத்து நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் சட்ட நிபுணர்களின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!