பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுத்த முதல்வர் 55 மாதமாக ஏமாற்றலாமா?- பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்?
அடுத்த தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்குறுதியை காப்பாற்றுங்கள்;
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தல்:
தமிழக அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வதாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் 55 மாதங்களாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வில்லை.
முதல்வரின் இந்த செயல் ஏமாற்றம் அளிக்கிறது.
முன்பு எதிர்கட்சியாக குரல் கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தி வந்த திமுக, அதை ஆளும்கட்சியானதும் முன்னுரிமை முக்கியத்துவம் கொடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருக்க வேண்டும்.
பணி நிரந்தரம் செய்வதாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2016 மற்றும் 2021 என இரண்டு தேர்தலில் வாக்குறுதி கொடுத்து 12 ஆயிரம் குடும்பங்களின் வாக்குகளை பெற்ற திமுக, இந்த முறை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததை முதல்வர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இதை முதல்வரிடம் நேரில் பலமுறை கோரிக்கை மனுவாக கொடுத்தும் இதுவரை வாய் திறந்து ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.
தேர்தல் வாக்குறுதியாக திமுக கொடுத்த இந்த பணி நிரந்தரம் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்களால் பல போராட்டங்களும் நடத்தப்பட்டும் ஒருமுறைகூட முதல்வரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
கைது செய்து போராட்டத்தை கலைப்பதை மட்டுமே வாடிக்கையாக நடக்கிறது.
சட்ட சபையில் உள்ள அனைத்து கட்சிகளும் பலமுறை வலியுறுத்திவிட்டது. சட்டசபையில் இடம்பெறாத கட்சிகளும் வலியுறுத்தி விட்டது.
ஆனாலும் முதல்வர் கண்டுகொள்ளாமல் பதில் சொல்லாமல் காலத்தை கடத்துகிறார்.
இதனால் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்கள் மத்தியில் முதல்வர் மீது குமுறல் ஏற்பட்டு உள்ளது.
இன்னும் சில நாட்களே முதல்வர் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது.
முதல்வர் அதற்குள் திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதற்காக பெரிய அளவில் நிதி செலவு ஏற்படாது. மாதம் ஒன்றுக்கு ஒரு 20 கோடி தேவைப்படும்.
இதை 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேற செய்ய வேண்டும்.
15 கல்விஆண்டுகளாக தற்காலிகமாக வேலை செய்கின்ற தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் சிக்கி வாழ்வாதாரதிற்காக போராடுகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே காலமுறை சம்பளம் அரசு சலுகைகள் கிடைக்கும்.
எனவே தற்போதைய ரூ. 12,500 சம்பளம் தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் தனது தலைமையிலான அமைச்சரவையில் ஒரு கொள்கை முடிவு எடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும்.
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல்: 9487257203


You must be logged in to post a comment.