முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியை இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் இருவேறு சித்தாந்தங்களுக்கிடையேயான போர் என்றும், பாஜகவின் சித்தாந்தம் சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி ஆகிய திராவிட இயக்கத்தால் போற்றி வளர்க்கப்பட்ட விழுமியங்களுக்கு எதிரானது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பா.ஜ.க.விடம் சரணடைந்த, சந்தர்ப்பவாத கட்சி என்றும், இரு கட்சிகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, எதேச்சதிகார பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்த ஒன்றிணைந்துள்ளனர் என்றும், பா.ஜ.க.வின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதும், அரசியலமைப்பைக் காப்பாற்றுவதுமே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் முதலமைச்சர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் முயற்சிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர், வட இந்தியாவிலேயே பாஜகவின் செல்வாக்கு குறைந்து வருவதாகவும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் மக்கள் விரோத மோடி அரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சமூகத்தின் அனைத்து பிரிவினரும், முக்கியமாக ஏழைகள், விவசாயிகள், வணிகர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், மீனவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் தவறான ஆட்சியின் வலியை அனுபவித்து வருகின்றனர் என்றும், முன்னெப்போதும் இல்லாத அளவு பணவீக்கம் மற்றும் வேலையின்மை காரணமாக மோடியின் ஏமாற்று அம்பலமாகியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வட இந்தியாவில் பாஜகவின் பிம்பம் சிதைந்துள்ளதாகவும், வடஇந்தியாவில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பாஜக தலைமை தென்னிந்தியாவில் கவனம் செலுத்துவதாகவும், பாஜகவின் இந்த வீண் முயற்சிகள் மற்றும் மோடியின் பிரச்சாரங்களை மீறி கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளதை நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் எழுச்சி என்பது வெறும் கற்பனை என்றும் கூறினார். தமிழ்நாடு எப்போதும் போல் மதச்சார்பற்ற சக்திகளின் கோட்டையாகவே இருக்கும் என்ற முதலமைச்சர், தென்னிந்திய மக்கள் இந்த முறையும் பா.ஜ.க.வுக்கு மரண அடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தார். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி என்ற சொல்லே பிரதமர் வேட்பாளருக்கான முகம் என்றும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரு திறமையான பிரதமர் இந்தியாவுக்குக் கிடைப்பார் என்றும் தெரிவித்தார்.
2004 தேர்தலின் போது, மன்மோகன் சிங் பிரதமராக வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்ற அவர் , சோனியா காந்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்ததையும் சுட்டிக்காட்டினார். மன்மோகன் சிங் எந்த ஆரவாரமும் இல்லாமல் பல சாதனைகளை படைத்தார் என்றும் அவர் தெரிவித்தார். இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றும் கூறினார்.
தனது தலைமையின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதை தமிழக மக்கள் கண்டுள்ளனர் என்றும், 5ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் ஜனநாயகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரமாக மாற்ற மோடி நினைப்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் வாழும் இந்தியா என்ற எண்ணம் அழிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பா.ஜ.க.வுக்கே நல்லதல்ல என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடி இருப்பார் ஆனால் பா.ஜ.க.என்ற கட்சி இருக்காது என்றும், இது வெறும் அரசியல் பேச்சு அல்ல உண்மை என்றும் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









