ராமநாதபுரம்_மாவட்டத்தில் செங்கல் சூளைக்காக #பனை_மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் காலங்களில் பனை பொருட்கள் இல்லாமல் போய்விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் பரவலாக பனை மரங்கள் காணப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் உள்ள விவசாயிகள் பனை மரங்களைக் கொண்டு வீடுகள் கட்டியும், பனை மட்டைகளில் கூரைகள் வேய்ந்தும், வாழ்ந்து வந்தனர். கோடை காலம் மற்றும் விழா காலங்களில் பனை மரத்தில் இருந்து பெறப்படும் நுங்குகள், பதனீரை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். பனை ஓலைகளைக்கொண்டு பாய், விசிறி, ஓலைபெட்டிகள் போன்றவைகள் செய்யப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

பனை வெல்லம் மருத்துவ குணம் கொண்டது. பனை பொருட்கள் இந்தியாவிலிருந்து ரூ.200 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பனை மரங்கள் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் தான் அதிகளவில் காணப்பட்டாலும் தாயகம் தமிழகம்தான் என்று கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தான் அதிக பனை மரங்கள் காணப்படுகிறது. முன்பெல்லாம் செங்கல் சூளைக்கு புகை அதிகம் வராத கருவேல், வாகை போன்ற மரங்களைக்கொண்டு செங்கல் தயாரித்து வந்தனர். சமீப காலத்தில் செங்கல் தேவை அதிகமானதாலும், காட்டுகருவேல மரங்கள் கிடைக்காத காரணத்தாலும் பனை மரங்களை விறகு வியாபாரிகள் வெட்ட துவங்கிவிட்டனர். வளர்ந்த நிலையில் உள்ள பனை ஒன்றுக்கு ரூ.250 முதல் 300 வரை தான் விலை கொடுக்கின்றனர்.

இப்படி குறைந்த விலைக்கு பனை மரங்களை வாங்கி, வெட்டி தினமும் லாரிகள் முலம் வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் வரும் காலங்களில் பனை பொருட்களான நுங்கு, பதனீர், பனை வெல்லம் மற்றும் பனை ஓலையால் செய்யப்படும் பொருட்கள் கிடைக்காமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பனை மரங்களின் பலன் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தான் கிடைக்கிறது. தற்போது இதை சுலபமாக வெட்டி அழிக்கின்றனர். மேலும் அக்காலத்தில் பனை மரங்கள் இல்லாமல் போயிருந்தால் இன்றைய தலைமுறைக்கு திருக்குறளும், சிலப்பதிகாரமும் கிடைத்திருக்காது. அந்தவகையில் தமிழை பாதுகாத்தபெருமையும் பனை மரங்களைத்தான் சேரும். எனவே பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்தி சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதே சமுக ஆர்வலர்களின் கருத்தாகும்’ என்றனர்.

ஏற்கனவே அரசாங்கம் மருத்துவம் குணம் பல படைத்த கள் இறக்கும் தொழிலை தடை செய்து விட்டு, டாஸ்மாக் கடைகளை தாராளமாக திறந்துவிட்டு இருப்பதும், பனை மரங்களை வைத்திருப்பவர்களை குறைந்த விலைக்கு விற்க தள்ளப்படுகிறார்கள் என்றால் மிகையாகாது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









