பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போலீஸாரின் இந்த கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தூத்துக்குடியில் போலீஸாரின் வாகனங்கள் பல தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை உடன்குடியில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்து கருங்குளம் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனிடையே தூத்துக்குடியில் இன்று அல்லது நாளைக்குள் அமைதி திரும்பும் என சிறப்பு கண்காணிப்பு அலுவலராக சென்றுள்ள டேவிதார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக இன்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் சாலைப் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைப்பேசி அழைப்பு வந்தது. இதையடுத்து இத்த தகவலை இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே பாம்பன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மெட்டல் டிடெக்டர் கருவியுடன் பாம்பன் சாலைப் பாலத்திற்கு சென்ற பாம்பன் போலீஸார் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை மேற்கொண்டனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் நின்றவாறு கடலின் அழகை ரசித்து வழக்கமான ஒன்று. இந்நிலையில் இன்றும் பாம்பன் சாலைப் பாலத்தில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பாலத்தில் வாகனங்களை நிறுத்தவும் போலீஸார் தடை விதித்தனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி தலைமையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் வெடிகுண்டு செயல் இழப்பு கருவிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் பாம்பன் பாலத்தில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே போலீஸார் நடத்திய விசாரணையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்ததாக தெரியவந்துள்ளது என ராமேஸ்வரம் டி.எஸ்.பி மகேஸ் கூறியுள்ளார். இது குறித்து போலீஸார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











