பனையேறும் தொழிலாளர்களின் அசத்தல் ஐடியா..!..

பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குவதில் உள்ள சிரமத்தை தவிர்க்கும் விதமாக, உடன்குடி பகுதி பனையேறும் தொழிலாளர்கள் புதிய வழிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலகட்டங்கள் பதநீர் சீசன் மாதங்களாகும்.

இதன்போது, பனையேறும் தொழிலாளர்கள் பனை மரத்தில் ஏறி, அங்கு வளர்ந்திருக்கும் பூம்பாளைகளை அரிவாளால் பக்குவமாக சீவி, சுண்ணாம்பு தடவிய கலசத்தில் பதநீரை வடியச் செய்கின்றனர். இவ்வாறு கிடைக்கும் பதநீரை அடுப்பில் வைத்து பக்குவமாகக் காய்ச்சி, கருப்பட்டி (பனை வெல்லம்) தயாரிக்கப்படுகிறது.

இந்த பதநீருக்காக, பனையேறும் தொழிலாளர்கள் தினசரி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் சுமார் 30 முதல் 40 மீட்டர் உயரமுள்ள பனை மரத்தில் ஏறி இறங்க வேண்டியுள்ளது. பனையேறுவதில் உள்ள இடரையும் துன்பத்தையும் போக்க இதுவரை உருப்படியான இயந்திரம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

பனையேறும் தொழிலாளர்கள், அடி மரத்தில் ஏறுவதற்கு முறுக்கு தடி, அதற்கு அடுத்து ஏறுவதற்கு கால்களில் தளைநார், பனையில் உள்ள சொரசொரப்பான பகுதியால் நெஞ்சில் காயமோ, தழும்புகளோ ஏற்படாமல் பாதுகாக்க கனமான தோலினால் செய்யப்பட்ட நெஞ்சு பட்டை போன்ற உபகரணங்களை பயன்படுத்தி வந்தனர்.

இந்த தொழிலில் உள்ள சிரமங்களின் காரணமாக, கடந்த பல ஆண்டுகளாகவே பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குவதற்கு கடுமையான ஆட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், உடன்குடி பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள், பனை ஏறும் முறையில் ஒரு மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, பனை மரத்தில் கீழிருந்து உச்சி வரை, சுமார் இரண்டு அடிக்கு ஒன்று என கம்புகளை வைத்துக் கட்டியுள்ளனர். இது, ஏணியைப் போல அமைந்திருப்பதால், இதன் மூலம், மளமளவென பனை மரத்தில் ஏறி இறங்குகின்றனர். இதனால், நெஞ்சுப் பகுதியில் காயமோ, தழும்புகளோ ஏற்படுவதில்லை.

இதுகுறித்து, பெரியபுரத்தைச் சேர்ந்த பனையேறும் தொழிலாளி முருகராஜ் என்பவர் கூறுகையில், “பாரம்பரியமான பனைத்தொழில் ஆண்டுக்கு ஆண்டு நலிவடைந்து வருவதற்கு முதல் காரணம், பனை ஏறுவதில் உள்ள சிரமத்தையறிந்து போதிய ஆட்கள் இந்த வராததே. இதனால், புதிய முறையில் பனை ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் பனை ஏறுவதற்கு ஏராளமானோர் தயாராக உள்ளனர்” என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!