பழனி அருகே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தைத்திருநாளை முன்னிட்டு 16 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! தீவிரமாக நடைபெற்று வரும் ஏற்பாடுகள்..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெரிய கலையமுத்தூர் கிராமத்தில் ஹை கோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்தது. கும்பாபிஷேக பணிகள் நிறைவுற்ற நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை விமர்சையாக நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து விழா குழுவினர் போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். வரும் ஜனவரி 16 ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவில் 500 க்கும் மேற்பட்ட காளைகள் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர். மேலும் மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்ள உள்ளன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசுகள், பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் கலந்து கொள்ள உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க கால்நடை மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பேரில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையிலான ஏராளமான போலீசார் செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.