பழனி அருகே நெய்காரபட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாரம்பரியம் மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது பெரியகலையம்புத்தூர்.
இங்குள்ள ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 100ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. இதன்படி இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதல் காளையாக காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான காளை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் , திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 600க்கும்மேற்பட்ட காளைகள் வரிசையாக வாடிவாசலில் இருந்து வெளியேறின. இதில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்க முற்பட்டனர். 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப் பட்டுள்ளனர். வாடிவாசல் வழியாக துள்ளி வந்த காளைகளை வீரர்கள் அடக்குவதும், அவர்களுக்கு பிடி கொடுக்காமல் காளைகள் திமிருவதும் பார்வையாளர்களை குஷி படுத்தி வருகிறது. பார்வையாளர்கள் மைதானத்திற்குள் புகுந்து விடாதபடி 2 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், சேர், குத்துவிளக்கு, செல்போன், சுவர் கடிகாரம், உள்ளிட்ட பல பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். போட்டியில் பங்கேற்று காயம் ஏற்படும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. காளைகள் பாதுகாப்பிற்காக கால்நடை மருத்துவர்களும் தயாராக உள்ளனர். பழனி டி.எஸ்.பி தனஞ்ஜெயன் தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









