பாகிஸ்தானில் பிறந்த கிறித்துவ மதத்தைச் சேர்ந்த நபருக்கு 43 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் குடியுரிமை..

பாகிஸ்தானில் பிறந்த கிறித்துவ மதத்தைச் சேர்ந்த நபருக்கு 43 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிறந்தவர் ஷேன் செபாஸ்டியன் பெரேரா. வடக்கு கோவாவின் அஞ்சுனா கிராமத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பு கராச்சிக்கு குடிபெயர்ந்தனர். அங்கே, கடந்த 1981, ஆகஸ்ட் மாதம் ஷேன் பிறந்தார். அவர் பிறந்த 4 மாதங்களில் அவரது குடும்பம் மீண்டும் கோவாவிற்கு வந்துவிட்டனர்.

ஷேன் சிறுவயதில் இருந்து கோவாவில் வளர்ந்து அங்கேயே தனது பள்ளிப்படிப்பையும் முடித்தார். கடந்த 2012-ல் இந்தியரான மரியா குளோரியா ஃபெர்னாண்டஸ் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

ஆனால், அவருக்கு இத்தனை ஆண்டுகள் இந்தியக் குடியுரிமை கிடைக்கவில்லை. அதைப் பெறுவதற்கான முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இந்த நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் இன்று ஷேனுக்கு இந்தியக் குடியுரிமைக்கானச் சான்றிதழை வழங்கினார்.

அந்தச் சான்றிதழில், 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)(சி ) இன் நிபந்தனைகளை பூர்த்தி செய்து, பிரிவு 6பி இன் விதிகளின் கீழ் இந்தியாவிற்குள் அவர் நுழைந்த நாளிலிருந்து அமலுக்கு வருவதால் இந்திய குடிமகனாக ஷேன் பதிவு செய்யப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு குடியுரிமைப் பெறும் நபர்களில் ஷேன் இரண்டாமவர். முதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜோசப் ஃபிரான்சிஸ் பெரேரா கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியக் குடியுரிமை பெற்றார்.

அவரின் வழிகாட்டுதலாலேயே தானும் குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்ததாக ஷேன் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “இந்தச் சட்டம் கோவாவுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று பலரும் கேள்வியெழுப்பினர். ஷேனின் விண்ணப்பத்துக்கு இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் 3 மாதங்களில் ஒப்புதல் கிடைத்துள்ளது. தற்போது கோவாவில் இந்திய குடியுரிமைக்குப் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முயற்சியால் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் சிக்கித் தவிக்கும் ஹிந்துக்கள், கிறித்துவர்கள், ஜெயின்கள், பார்சிகள், புத்த மதத்தினர், சீக்கியர்கள் ஆகியோர் பெரிதும் பயனடைவார்கள்” எனத் தெரிவித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!