வாழும் சூழலுடன் நம்முடைய பால்வழி திரளில் மட்டும் 30 கோடி கோள்கள் இருக்கலாம்; நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்..
பூமியை போல் வாழ்வதற்கு உகந்த சூழலுடன் 30 கோடி கோள்களை (Habitable exoplanets) பால்வழி திரள் (Milkyway galaxy) கொண்டுள்ளது என நாசா ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரிய தகவலை வெளியிட்டு உள்ளனர்.
பூமியில் உயிரினங்கள் தோன்றி, ஆட்சி அதிகாரம் செலுத்தும் அளவுக்கு மனித இனம் வளர்ந்துள்ள சூழலில் நாம் வாழும் இந்த அண்டம் தவிர்த்து வேறு வாழ்விடங்கள் உள்ளனவா? என விஞ்ஞானிகள் உலகம் ஆராய்ச்சியில் இறங்கியது.
இதில், ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட தகவலின்படி, 10 ஆயிரம் கோடி கேலக்சி எனும் வின்மீண் திரள்கள் (அல்லது வின்மீண் பேரடைகள்) நமது அண்டத்தில் (universe) உள்ளன என தெரிய வந்துள்ளது. தொலைநோக்கி தொழில் நுட்பம் வளர்ந்த பின் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வின்மீண் பேரடைகள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
நாம் இருக்கும் வின்மீண் பேரடையான பால்வழி திரளில் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. நெருப்பு கோள் என கூறப்படும் சூரியன் நட்சத்திர வகையை சேர்ந்தது. நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்பட பிற கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. சூரியன் தவிர்த்து, பிற நட்சத்திரங்களை சுற்றி வரும் 4,500 கோள்கள் இதுவரை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் உயிர்வாழ்வதற்கான பண்புகளை கொண்ட கோள்கள் குறைந்த அளவில் உள்ளன என நம்பப்படுகிறது.
நமது பூமியில் கோடிக்கணக்கான ஆச்சரியங்கள் உள்ளன. இதுதவிர, இதேபோன்ற வாழும் சூழலை கொண்ட பகுதிகள் விண்வெளியில் இருப்பது பற்றி ஆய்வு மேற்கொள்வதற்கான பணியின் ஒரு பகுதியாக கடந்த 2009ம் ஆண்டு கெப்ளர் தொலைநோக்கி விண்கலம் அனுப்பப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் எரிபொருள் தீர்ந்த நிலையில் தனது பணியை அது முடித்து கொண்டது.
இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பிய தகவல்களை அடிப்படையாக கொண்டு நடந்த ஆராய்ச்சியின் பயனாக சூரியனின் வெப்ப நிலைக்கு, 1,500 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வெப்ப நிலை கொண்ட சூரியனையொத்த நட்சத்திரங்கள் உள்ளன என தெரிய வந்துள்ளது.
அவற்றை சுற்றி மேற்பரப்பில் திரவ நீர் கொண்ட பாறைகளாலான கோள்கள் சுற்றி வருகின்றன. நமது சூரிய குடும்பத்தில் பாறாங்கற்கள், வாயுக்கள், நீர்மங்கள் போன்றவற்றை கொண்ட கோள்கள் உள்ளன. இந்த ஆய்வால், பால்வழி திரளில் வாழ்வதற்கு உகந்த சூழலுடன் 30 கோடி கோள்கள் உள்ளன என நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த ஆய்வின் தலைமை விஞ்ஞானியான ஸ்டீவ் பிரைசன் கூறும்பொழுது, 100 கோடிக்கும் மேற்பட்ட கோள்கள் உள்ளன என கெப்ளர் முன்பே நமக்கு தெரிவித்து விட்டது. ஆனால், கற்கள் நிறைந்த, வாழ கூடிய தன்மை கொண்ட எண்ணற்ற கோள்களை நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம்.
வாழ்வதற்கு தேவையான பல காரணிகளில் ஒன்றான நீர், கோள்களின் மேற்பரப்பில் காணப்படுவது, அதிக நம்பிக்கையை அளிக்கிறது என கூறியுள்ளார்.
கடந்த அக்டோபரில் வேறொரு ஆராய்ச்சியாளர்கள் குழு, வாழ்வியலுக்கு தேவையான சரியான சூழலை கொண்ட 24 கோள்களை கண்டுபிடித்து இருந்தனர்.
பால்வெளி (Milkyway)என்பது நம் சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை (Galaxy) ஆகும்.
பால்வெளி எனும் சொல் இலத்தின் மொழிச்சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும்.பால் வெளியின் வட்டு வடிவ அமைப்பை அதன் உள்ளிருக்கும் புவியிலிருந்து நோக்குவதால் அது பட்டையாகத் தோற்றமளிக்கிறது. கலீலியோ கலிலி1610 ஆம் ஆண்டில் தன் தொலைநோக்கியைக் கொண்டு அந்த ஒளிர் பட்டையை தனித்தனி விண்மீன்களாகப் பிரித்து நோக்கினார். 1920ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான வானியலாளர்கள் பால் வழியில் அண்டத்தின் அனைத்து விண்மீன்களும் அடங்கியுள்ளதாகக் கருதி வந்தனர்.
பால்வழி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பட்டைச் சுருள் பேரடையாகும். இது 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது. மேலும் இதில் குறைந்தபட்சம் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது.
சூரிய மண்டலம், பால்வெளி மையத்தில் இருந்து 26,490 (± 100) ஒளியாண்டுகள் தொலைவில், வாயு மற்றும் தூசி ஆகியவற்றின் சுழல் வடிவ செறிவுகளில் ஒன்றான ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது.
You must be logged in to post a comment.