ஊட்டியை சுற்றிப் பார்க்க ‘நூறு ரூபாய்’ போதும்! போக்குவரத்து கழகத்தின் சூப்பர் திட்டம்..
ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது ‘சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை’ இயக்கி வருகின்றது.
கோடைக்காலம் தொடங்கினால், ஊட்டியைச் சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்துவிடுவது வழக்கம். ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது ‘சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை’ இயக்கி வருகின்றது.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நீலகிரி மண்டல வணிக மேலாளர் பிரகாஷ் கூறும்போது,
“ஊட்டிக்குச் சுற்றுலா வரும் பயணிகள் ‘பாதுகாப்புடன் அதே சமயம், குறைந்தச் செலவில் ஊட்டியைச் சுற்றிப் பார்க்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நீலகிரி மண்டலம், இந்தத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தன்படி, இந்தச் சுற்றுப் பேருந்துகளானது மத்தியப் பேருந்து நிலையத்தில் தொடங்கி தண்டர்வோர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டீ மீயூசியம், ரோஜா பூங்கா ஆகிய இடங்களைக் கவர் செய்கின்றது.
இந்தச் சுற்றுப் பேருந்துகளில் ஏதாவது ஒன்றில் ஏறி, 100 ரூபாய் கொடுத்து நீங்கள் பயண அட்டை ஒன்றை வாங்கிக் கொள்ளவேண்டும். நீங்கள் எந்த நாளில் பயண அட்டை எடுக்குறீர்களோ, அந்த தேதியில் பயண அட்டையில், ‘டிக்’ அடித்துத் தருவார்கள்.
நீங்கள் அந்த டிக்கெட்டை வைத்து, அந்த நாள் முழுவதும் ஊட்டியின் முக்கியச் சுற்றுலாத் தலங்களான தண்டர் வோர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டீ மீயூசியம், ரோஜா பூங்கா ஆகியவற்றை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சுற்றிப் பார்க்கலாம். அதிலும் சிறுவர்களாக இருந்தால் கட்டணம் வெறும் 50 ரூபாய் தான். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.
பயணிகள் தங்கள் விருப்பப்படி, ஒரு இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடலாம். பிறகு அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தால், முதல் சுற்றுப்பேருந்தில் எடுத்த பயண அட்டையைக் காட்டி, மற்ற சுற்றுப் பேருந்துகளில் பயணிக்கலாம்.
ஆனால், இந்த பயண அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும். எனவே, மேற்சொன்ன இடங்கள் முழுவதையும் ஒரே நாளில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் சுற்றுலாப் பயணிகள், அதற்கு ஏற்ப தங்களது திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டமானது ஏப்ரல் பாதியில் தொடங்கப்பட்டது. பெரும்பாலும் ஜூன் 10-ம் தேதி வரை நீடிக்கும்.” என்றார்.
You must be logged in to post a comment.