ஆன்லைனில் மோசடிகள் பெருகி வரும் நிலையில், வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்கள் மூலமாக தற்போது review task fraud எனும் ஆன்லைன் மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, Telegram/WhatsApp வாயிலாக அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து வீட்டில் இருந்த படியே மொபைல் போன் மூலமாக online part time job செய்து தினமும் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வரும் message-களுக்கு ஆசைப்பட்டு விருப்பம் தெரிவித்து விட்டால் சில review task-களை கொடுத்து அதை செய்து முடித்ததும் அதற்காக ஒரு review task-ற்கு சில நூறு அல்லது ஆயிரம் ரூபாய் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்.
மேலும், உங்களை டெலிகிராம் அல்லது வாட்ஸப் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு அவர்களது website-ல் சில task-களை செய்து முடித்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி முதலில் சில ஆயிரம் பணம் முதலீடு செய்ய வைத்து அதை விட கொஞ்சம் அதிக பணத்தை கொடுத்து நம்ப வைப்பார்கள். பின்னர் மேலும் ஆசை வார்த்தை கூறி உங்களை அதிகமான பணத்தை செலுத்த கூறி கட்டாயப் படுத்துவார்கள். அதிகமான பணத்தை முதலீடு செய்தவுடன் அதிக இலாபம் கிடைத்து இருப்பதாகவும் எனவும், அந்த பணத்தை உடனே எடுக்க முடியாது எனக் கூறியும் இன்னும் சில task-களை செய்ய வைத்தும் மீண்டும் பணம் கட்டினால் தான் மேற்படி பணத்தை இலாபத் தோடு பெற முடியம் என இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி விடுவார்கள்.
எனவே, உங்களது சொந்த நிலத்தையோ, வீட்டையோ, நகையையோ அடமானம் வைத்தோ (அ) விற்றோ பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணைய முகவரி மற்றும் 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.