மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்ற கலைமகள் கல்வி நிறுவனம் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரித்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலமாக பாடங்களை நடத்தி வருவதை பெற்றோர்கள் வரவேற்கின்றனர். கொரோனா வைரஸ் நோய் காரணமாக மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள கலைமகள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள 800 மாணவர்களை தேர்வெழுத தயார் படுத்தும் விதமாக ஆன்-லைன் மூலம் ஏராளமான ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தினை தினந்தோறும் சமூக வலைதளமான யூ டியூப்பில் பதிவேற்றியும், பகிர்ந்தும் வாட்ஸ் அப்பில் வெளியிட்டும் வருகின்றனர். மேலும் ஆன்ட்ராய்டு செல்போன் இல்லாத மாணவர்களுக்காக உள்ளுர் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதேபோல் இந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் கல்லூரி மாணவர்களையும் தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக பேராசிரியர்கள் பாடம் நடத்தி யூடியுப்பில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் பயனடையும் வகையில் உள்ளதாக பெற்றோர்களும், மாணவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





You must be logged in to post a comment.