பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..

இந்திய திரையுலக வரலாற்றில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுபவர் சரோஜா தேவி உடல்நல குறைவால் இன்று (14.7.2025) பெங்களூருவில் காலமானார். தமிழ் , தெலுங்கு , கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரோஜா தேவி.

17 வயதில் கன்னட படமான மகாகவி காளிதாசா (1955) எனும் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், 1958ல் தமிழில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்-க்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இந்த படத்தில் இருந்து அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்தது.

அபிநய சரஸ்வதி கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் இவர், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். கடைசியாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவரின் திரை வாழ்க்கையைப் போற்றும் விதமாக வாழ்நாள் சாதனையாளர், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சரோஜா தேவி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி, தன்னுடைய கண்களால் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர். அந்த காலத்திலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகையாகவும் திகழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!