புதுச்சேரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அவரின் பெரியார் பற்றிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பற்றியும், திமுக-வினர் சீமானின் பேச்சுக்கு ஆதாரங்கள் கேட்பது பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய சீமான்,
“பெரியார் குறித்து பேசியதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் அவர்களே (திமுக) வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டால் எந்த விதத்தில் நியாயம்? க.ப.அரவாணன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் இது குறித்து எழுதி இருக்கிறார்கள். அனைத்து ஆதாரங்களையும் முடக்கி வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டால் என்ன நியாயம்? நம்மை கீழானவர்கள் என்று கூறுகிறார்கள் அப்படி என்றால் அவர்கள் யார்?
இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் எதிரிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழர்கள் என்று பேசுவது எந்த இனத்திற்கு எதிரி? உலகத்தில் உள்ள அனைத்து இடத்திற்கும் கலை இலக்கிய பண்பாடு கொடுத்து அடையாளப்படுத்தியது மொழிதான். பெண்ணினத்தை பற்றி பெரியார் போன்ற பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் ‘பெரியார்தான் பேசினார்’ என்பதைத்தான் நான் எதிர்க்கிறேன்.
கடந்த 2008ஆம் ஆண்டு வரை திருட்டு கூட்டத்தில் நானும் ஒருவனாகதான் இருந்தேன். தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்த பிறகுதான் கொள்கைகளை மாற்றிக் கொண்டேன். என்னுடைய கொள்கை என்பது திராவிடத்தை ஆதரவாக பேசுபவர்களையும் எதிர்ப்பதுதான்.
பெரியார் குறித்து கருத்து தெரிவித்த எனக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள், ஏன் டங்க்ஸ்டன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்திற்கு குரல் கொடுக்கவில்லை? எனக்கு எதிராக போராட்டம் நடத்தி என்னை நோக்கி செருப்பு எரிகிறவர்களுக்கு நான் சொல்வது, ‘செருப்பு ஏழு அல்லது எட்டு சைஸ் செருப்பாக இருக்க வேண்டும்’ என்பதுதான். இதேபோல் முட்டை என்பதும் நாட்டுக்கோழி முட்டையாக வீச வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “திராவிடம் குறித்து பேசுவதை நிறுத்தும் வரை பெரியார் குறித்து தொடர்ந்து பேசுவேன்” என தெரிவித்தார்.
இத்துடன் “என் மீது பல்வேறு வழக்கு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தை பார்த்தவன் நான். பெரியார் குறித்து பேசிய என் மீது வழக்கு போட்டால் அதனை எதிர்கொள்வேன்” என்ற சீமான், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் புதுச்சேரி போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புறப்பட்டு சென்றார் சீமான்.
முன்னதாக பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமானுக்கு எதிராக திமுக சார்பில் புகார் திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் தலைமையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.