திமுக கூட்டணிக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக பேசி வந்ததால், அக்கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து ஆதவ் அர்ஜுனா தொலைக்காட்சி நேர்காணலிலும், “எல்லோருக்குமான தலைவர் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு விசிக தலைவர் திருமாவளவன் வராததற்கு காரணம் திமுக கொடுத்த அழுத்தம்தான்” என தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில்தான், இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து கருத்து கூறுவதே தவறு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், “இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால் அவருக்கு ஏதோ மறைமுக செயல் திட்டம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. இடைநீக்கம் என்பது வெறும் கண் துடைப்பு அல்ல. கட்சி விதிகளின்படி ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று திருமாவளவன் விளக்கமளித்தார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், “எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.